இலங்கையின் கல்வி வரலாற்றில் அருந் தொண்டாற்றிய கத்தோலிக்க மிசனரிமாரினால் மாவத்தை புனித அந்தோனியார் தேவாலய வளவினுள் ஓர் சிறிய கட்டடத்தில் 1945 ம் ஆண்டளவில் புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயம் 40 பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது . அடிப்படை வசதிகளற்ற நிலையில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் 1950 ம் ஆண்டளவில் மாணவர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்தது . தொடர்ந்து கல்வி கற்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் தற்காலிக கொட்டகைகளில் வகுப்புக்கள் நடாத்தப்பட்டன . இப்பிரதேசத்தில் தமிழ் மாணவர்களின் கல்வித் தாகத்தைத் தணிப்பதற்கு உதவிய இப் பாடசாலை 1958 ம் ஆண்டளவில் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு கல்வித் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்தது .
இக்காலப்பகுதிகளில் அதிபராகக் கடமையாற்றியோருள் திரு.சின்னத்தம்பி , திருமதி சிவபாலசிங்கம் போன்றோரும் அடங்குவர் . 1980 ம் ஆண்டு காலப்பகுதியில் தரம் 1 முதல் 8 வரையான வகுப்புக்களே காணப்பட்டன . 1985 ம் ஆண்டு கார்மேல் கன்னியர் மடசபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி வில்மா அவர்கள் அதிபராகக் கடமையேற்றார் . அக்காலப் பகுதியிலும் அதே ஆலய முன்றலில் ஓர் சிறிய கட்டடத்திலேயே தரம் 8 வரையான வகப்புக்களுடன் 8 ஆசிரியர்களின் சேவையிலும் இயங்கி வந்துள்ளது . 1988 ம் ஆண்டு காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் வின்சன்ட் பெரேரா அவர்களின் உதவியினால் இரு மாடிகளைக் கொண்ட பாடசாலையாக தற்போது அமைந்துள்ள இடத்தில் நிறுவப்பட்டது . அருட்சகோதரி வில்மாவின் பணியினைத் தொடர்ந்து 1995 ம் ஆண்டு அதிபராக அருட்சகோதரி லூக்கிறீஸ் அவர்கள் அதிபராகக் காலடி எடுத்து வைத்தார் . இவர் கடமையேற்ற காலத்தில் மாணவர் தொகை 400 ஆகவும் ஆசிரியர் எண்ணிக்கை 12 ஆகவும் காணப்பட்டது . அதிபர் அருட் சகோதரி லூக்கிறீஸ் அக்காலப்பகுதியில் சேவையிலிருந்த அமைச்சர்கள் நலன்விரும்பிகள் போன்றோரை அணுகி உதவி கோரியது மட்டுமல்லாது நெதர்லாந்து நாட்டவரின் உதவியையும் நாடினார் . பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை அமைத்துப் பெற்றோரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் . கௌரவ அமைச்சர் திரு . பௌசி அவர்களின் உதவியுடன் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து இரு நேரப் பாடசாலையாக இயங்கிய பாடசாலையை ஒரு நேரப்பாடசாலையாக நடாத்தத் தொடங்கினார் . மின்சாரம் , நீர் விநியோகம் , தொலைபேசி வசதியென ஏற்படுத்தப்பட்டது . மாணவர் எண்ணிக்கை அதிகரித்தன . தேவையான ஆசிரியர் வளம் , பௌதீகவளம் போன்றவைகளும் உரிய நேரத்தில் கிடைத்தது . பாடசாலைக்கான அடுத்த இருமாடிக்கட்டடம் நூல்நிலையம் போன்றன இக்காலப்பகுதியிலேயே கிடைக்கப் பெற்றது . அதுமட்டுமல்லாமல் 2000 ம் ஆண்டு ஹங்கேரி நாட்டின் தூதுவரான திரு றொகான் நாணயக்கார என்பவரால் அவருக்குச் சொந்தமான 30 பேர்ச் காணியும் இப் பாடசாலைக்கு வழங்கப்பட்டது . பாடசாலை சுற்றுப்புறச் சூழல் அழகுபடுத்தப்பட்டது .
2003 ம் ஆண்டு தரம் 6 தொடக்கம் ஆங்கில மொழி மூலக் கல்வியும் பாடசாலையில் ஏற்படுத்தப்பட்டது . பலரது உதவியுடன் கம்பியூட்டர்களையும் பெற்று கம்பியூட்டர்க் கல்வியும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது . க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் பெறுபேறுகள் சிறந்த முறையில் பெறப்பட்டதால் க.பொ.த உயர்தர வகுப்பக்கள் ஆரம்பிக்கப்பட்டன . பாடசாலையும் மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது . 2005 ல் அருட்சகோதரி பவளராணி அதிபராகப் பொறுப்பேற்றார் . இக்காலத்தில் வசதிகள் சீர் செய்யப்பட்டது . இவரைத் தொடர்ந்து 2006 ல் அருட்சகோதரி புஸ்பராணி அவர்களும் 2007 ல் அருட் சகோதரி ஷமிலாவும் அதிபர்களாகக் கடமையாற்றினார்கள் . 2008 ல் பொறுப்பேற்ற அருட்சகோதரி அருள்மரியா 2 வது கட்டடத்தில் இரு மாடிகள் பூரணப்படுத்தப்பட்டன . ஏற்கனவே இருந்த பழைய கட்டிடம் உடைக்கப்பட்டு கல்வித்திணைக்களத்தின் உதவியுடன் 3 ஆவது மாடிக் கட்டிடத்திற்கு அத்திபாரம் இடப்பட்டது . இவரது இடமாற்றத்தைத் தொடர்ந்து அருட்சகோதரி இலேயன் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றார் . இவரது காலத்தில் 3 ம் இரு மாடிக்கட்டிடம் முழுமையாக்கப்பட்டதுடன் , மாணவர்களின் வழிபாட்டிற்காக அந்தோனியாரின் திருவுருவம் ஸ்தாபிக்கப்பட்டது . இவரது ஓய்வின் பின் 2015 ம் ஆண்டு ஐப்பசி மாதம் தற்போதைய அதிபர் அருட்சகோதரி சாந்தனா அவர்கள் கடமையேற்று பாடசாலையை சிறப்புற வழிநடாத்தி வருகின்றார் .
இலங்கைத் திருநாட்டின் மேல் மாகாணத்தில் அமையப் பெற்றுள்ள கொழும்பு வடக்குப்பகுதியிலுள்ள பாடசாலைகளில் மாவத்தைப் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள கொழும்பு மாதம்பிட்டி புனித அந்தோனியார் தமிழ் வித்தியாலயம் எனும் நாமத்தைக் கொண்டிருந்த இப் பாடசாலைக்கு 1999 ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5 ம் திகதி கணித ஆசிரியராக யாழ் மாவட்டத்திலிருந்து இடமாற்றம் பெற்று காலடி எடுத்து வைத்தேன் . அன்றிலிருந்து இன்று வரை எனது 18 வருட கால சேவையில் மலரும் நினைவுகளை மீட்பதில் பெருமை கொள்கிறேன் . அன்றைய தினம் பாடசாலையில் ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாக அதிபர் அருட்சகோதரி லூக்கிறீஸ் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்தது . நானும் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களால் சிறந்த முறையில் வரவேற்கப்பட்டமை என்னால் மறக்க முடியாத நிகழ்வாகும் . அன்றே நேரசூசியும் வழங்கப்பட்டு எனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டேன் . அக்காலப்பகுதியில் பாடசாலையில் தற்சமயம் உள்ள ஆரம்பப்பிரிவுக் கட்டிடம் ஒன்று மட்டுமே நிரந்தரக் கட்டிடமாக காணப்பட்டது . அத்துடன் தகரத்தால் வேயப்பட்ட கொட்டகை ஒன்றும் அருகே காணப்பட்டது . தரம் 1 இலிருந்து தரம் 11 வரையான வகுப்புகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன . இடப்பற்றாக்குறை காரணமாக வகுப்புக்கள் இரு நேரப் பாடசாலையாக நடை பெற்றுக்கொண்டிருந்தன . நானும் மாலை நேர வகுப்புக்குரிய கணித ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன் . கிட்டத்தட்ட 450 பிள்ளைகள் வரையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர் . பாடசாலை நுழைவாயிலும் இடப்பற்றாக்குறை காரணமாக அருகேயுள்ள சிங்களப்பாடசாலைக்கான நுழைவாயிலும் ஒன்றாக அமைந்திருந்தது . வித்தியாசமான கற்பித்தல் சூழல் வறிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் கல்வி கற்றாலும் அவர்கள் கற்பதிலுள்ள ஆர்வம் என்னை முழு மனதுடன் பணியில் ஈடுபட ஊன்றுகோலாக அமைந்தது . மாணவர்களை நற்பண்புகளும் சிறந்த பழக்கவழக்கங்களும் உடையோராக மாற்றுவதற்கும் சிறந்த கல்வியறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பாடசாலை வளங்களை மேம்படுத்தவும் அதிபர் அருட்சகோதரி லூக்கிறீஸ் அவர்கள் அயராது உழைத்தமையைக்கண்டு வியந்தேன் . அன்பான ஆசிரியர் குழாமும் பணியினை சிறப்பாக ஆற்றுவதற்கு ஊன்றுகோலானது . அதிபரது அயராத முயற்சியினால் மாணவர்கள் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டதுடன் ஏனைய கல்விசார் நடவடிக்கைகளிலும் சிறப்பாகத் துலங்கினர் . மாவத்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் மொழி மூலமாகக் கல்விகற்கும் மாணவர்களுக்குரிய இப் பாடசாலையில் மாணவர் தொகை அதிகரிக்க பௌதீக வளப் பற்றாக்குறைகளும் தோன்றியன . அருட் சகோதரி அவர்கள் வேண்டிய தளபாடங்களைப் பெற்றுக்கொள்வதிலும் சரி கட்டிட வசதிகளைப் பெற்றுக் கொள்வதிலும் சரி முன்னின்று உழைத்தார் . அவரது முயற்சியின் பயனாக தகரக் கொட்டகையாக இருந்த இடம் இரு மாடிகளைக் கொண்ட கட்டிடத்திற்கு அத்திவாரமிடப்பட்டு தளப்பகுதி வேலைகள் முடிவுற , இருநேரப் பாடசாலையாக இருந்த பாடசாலை ஒருநேரப்பாடசாலையாக இயங்கத் தொடங்கியது . மாணவர்களுக்கு வேண்டிய கணனிக் கல்வியையும் பெற்றுக் கொடுக்க ஆவனசெய்தார் . மாணவர்கள் கல்வியின் உச்சப்பயனைப் பெறவேண்டும் என்பதற்காக ஆசிரியர்களையும் அன்போடு நடத்தினார் . மாணவர்கள் எனது பாடமான கணித பாடத்திலும் விருப்புடன் கற்று சிறந்த பெறுபேறினைப் பெற்றுக் கொண்டமை எனக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்தது என்றால் மிகையாகாது . கற்பித்தலில் மட்டுமல்லாது எனக்கு வழங்கப்பட்ட ஏனைய பொறுப்புக்களையும் மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி திருப்தியுற்றேன் . அதிபர் அவர்கள் பாடசாலைக்கு வேண்டிய கட்டிடங்களை அமைப்பதாயின் காணி வேண்டுமென்பதையும் கருத்திற் கொண்டு அயராது முயற்சித்ததன் பயன் ஹங்கேரி நாட்டின் இலங்கைத் தூதுவரான திரு . றொகான்
நாணயக்கார என்பவர் தாராள மனதுடன் தனக்குச் சொந்தமான 30 பேர்ச் காணியினை இத் தமிழ்ப்பாடசாலைக்கென வழங்க முன்வந்தார் . 2002 ம் ஆண்டு காணி கிடைத்ததும் சுற்றிவர மதில் , நுழைவாயில் எனப் பாடசாலை அழகுடன் மிளிர்ந்தது . பாடசாலைக்கென நூலகமும் உலக வங்கியின் உதவியுடன் நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வந்தது . இவ்வாறு பல வளர்ச்சிப்படிகளைக் கண்ட பாடசாலையில் அதே காலப்பகுதியில் நானும் கடமையாற்றியுள்ளேன் என்பது பெருமைக்குரிய விடயமே . 2005 ஆம் இவரது காலப்பகுதியிலேயே உயர்தர கலைப்பிரிவு வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன . ஆண்டு அதிபர் அவர்கள் ஓய்வு பெற அருட்சகோதரி பவளராணி அவர்கள் அதிபராகக் கடமையேற்றுக் கொண்டார் . உயர்தர வகுப்புக்களில் வணிகப்பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு பாடசாலை மகா வித்தியாலயமாகத் தரமுயர்வு பெற்றது . அதிபர் அவர்கள் 2006 ம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச் செல்ல அருட்சகோதரி புஸ்பராணி அவர்கள் அதிபராகக் கடமையேற்றுக் கொண்டார் . இவருக்குப் பின் சிறிது காலம் அருட்சகோதரி சமிளா அவர்களும் அதிபராகப் பொறுப்பேற்று வழிநடாத்தி இளைப்பாற 2008 ம் ஆண்டு அன்புள்ளம் கொண்ட அருட்சகோதரி அருள்மரியா பொறுப்பேற்றுக் கொண்டார் . இவரும் பாடசாலையின் தரத்தினை மேலும் உயர்த்த அரும்பாடுபட்டார் . இரண்டாவது இரு மாடிக்கட்டிடத்தின் இரு மாடிகளும் பூரணப்படுத்தப்பட்டது . மாணவர்கள் இட நெருக்கடியின்றி கல்வி கற்கக்கூடியதாக இருந்தது . அதுமட்டுமல்லாது புதிதாகக் கிடைத்த காணியில் அமைந்திருந்த பழைய கட்டிடமும் உடைத்தகற்றப்பட்டு கல்வித் திணைக்களத்தின் உதவியுடன் மூன்றாவது இரு மாடிக்கட்டிடத்திற்கு அத்திவாரமிடப்பட்டு கட்டிடப்பணிகள் ஆரம்பமானது . மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் பல முன்னேற்றங்களைக் கண்டனர் . பாடசாலையிலே பல காலமாக நிலவி வந்த சிற்றுண்டிச்சாலை இல்லாத குறையும் நிவர்த்திசெய்யப்பட்டது . 2014 ஆம் ஆண்டு அதிபர் அருட்சகோதரி அருள்மரியா இடமாற்றலாகிச் செல்ல அதிபராகக் கடமையேற்றுக்கொண்டார் அருட்சகோதரி இலேன் அவர்கள் . இறைபக்தியும் கனிவுள்ளமும் கொண்ட அவரது பண்புகளை அங்கேயிருந்து அனுபவித்து வியந்தவள் நான் . மாணவர்களைப் போட்டிகளுக்கு பயிற்றுவிப்பதாயினும் சரி ஆசிரியர்களுடன் தானும் ஒருவராகக் களமிறங்கி வியத்தகு பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வழிவகுத்தவர் அருட்சகோதரி இலேன் அவர்கள் . அதுமட்டுமல்லாது பாடசாலையினை அழகுற வடிவமைப்பதற்கும் வழிவகுத்தார் . 2015 ம் ஆண்டு அருட்சகோதரி இலேன் அவர்கள் ஓய்வுபெற அதிபராகக் கடமையேற்றுக் கொண்டார் எமது தற்போதைய அதிபர் அருட்சகோதரி சாந்தனா அவர்கள் . இளமையும் துடிப்பும் கொண்ட அவர் இப்பாடசாலைக்குக் கிடைத்தமை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைத்த பாக்கியமே . பல வளர்ச்சிப்படிகளைக் கண்ட இப் பாடசாலையில் அதிபர் அலுவலகம் இல்லாமை ஓர் குறையாகவே காணப்பட்டது . அதனை நிவர்த்தி செய்த பெருமை எமது அதிபரையே சாரும் . பரோபகாரிகளிடமிருந்து உதவிகளைப் பெறுவதாயினும் சரி கல்வித் திணைக்களங்களின் உதவியைப் பெறுவதாயினும் சரி துடிப்புடன் பணியாற்றுவதை கண் கூடாகக் காணக் கூடியதாகவுள்ளது . இன்ற இப் பாடசாலை கொழும்பு வடக்குப் பகுதியிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கு நிகராக வளம் பெற்றிருக்கிறது என்றால் மிகையில்லை . இத்தகைய பாடசாலையில் எனது சேவைக்காலத்தில் கூடிய பகுதியை நிறைவேற்றியுள்ளேன் என்பதையிட்டு களிப்படைகிறேன் . அதிபர் அவர்களது தலைமைத்துவத்தின் கீழ் இப் எங்களைப் பெற்றுக் கொள்வதுடன் மாணவர்களது கல்வித் தரமும் உயர்ச்சியடைய வேண்டுமெனவும் இறைவனை வேண்டி நீங்கா நினைவுகளுடன் விடைபெறுகின்றேன் . நன்றி பாடசாலை பல...